இந்தியாவில் தலைசிறந்த வில்வித்தை வீராங்கனைகளில் ஒருவராக வலம்வருபவர் தீபிகா குமாரி. ராஞ்சியைச் சேர்ந்த இவர், வில்வித்தை உலகக்கோப்பை தொடரில், தனிநபர் பிரிவில் இரண்டு முறை, அணிப் பிரிவில் மூன்று முறை என மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இதுமட்டுமின்றி உலகக்கோப்பை தொடரில் 13 வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்களையும் அவர் பெற்றுள்ளார். 2010இல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், அதே ஆண்டில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்று அசத்தினார்.
இவரது சிறப்பான ஆட்டத்தைக் கௌரவப்படுத்தும் விதமாக 2012இல் இவருக்கு அர்ஜுனா விருதும், 2016இல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவருக்கும் நட்சத்திர வில்வித்தை வீரரான அதானு தாஸூக்கும் 2008இல் நட்பு உருவாகி பின்னாட்களில் காதலாக மலர்ந்தது. பின் இருவருக்கும் 2018இல் நிச்சயதார்த்தமானது. இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கரோனா வைரஸ் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாட்டில் அதிகரித்துவரும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இச்சூழலில் தீபிகா குமாரி-அதானு தாஸ் ஆகியோருக்கு இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மொராபாடியில் இன்று பல கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.