கத்தார்:உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த 22 ஆவது பிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பிரபல கால்பந்து ஜாம்பவான்களான கிறிஸ்டியானா ரொனல்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இந்த போட்டி கடைசி போட்டி என்பதால் அனைவருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த தொடரில் எதிர்பாராத விதமாக பெரிய அணிகளை காட்டிலும் சிறிய அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன.
கத்தாரில் கடந்த நவம்பர்-20 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய பிஃபா போட்டியின் ஐந்தாம் நாளான இன்று சுவிட்சர்லாந்து - கேமரூன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் ஆட்ட இறுதியில் சுவிட்சர்லாந்தின் ப்ரீல் எம்போலோ அடித்த கோலால் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தியது.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து 2 ஆவது பாதியில் 48 ஆவது நிமிடத்தில் ப்ரீல் எம்போலோ கோல் அடித்தார்.இதனைத் தொடர்ந்து கேமரூன் வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்து தோற்றனர். சுவிட்சர்லாந்து அணிக்காக கோல் அடித்த ப்ரீல் கேம்ரூன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இதனால் அவர் பிறந்த நாட்டிற்கு எதிராக அடித்த கோலை ஏற்று கொள்ள முடியாது என கேமரூன் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.