இந்திய தடகள வீராங்கனையான டூட்டி சந்த், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தித்தாளுக்கு பேட்டியளித்த அவர், தான் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும், தனது நீண்டநாள் தோழியை விரைவில் மணமுடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தனது தோழி குறித்த தகவல்களை வெளியிட விரும்பவில்லை. ஏனெனில் அது தேவையில்லாத கவனங்களை என் மீது உண்டாக்கும் என தெரிவித்தார்.
மேலும் ஒருவர் தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க சுதந்திரம் தேவை. எப்போதும் தான் தன் பாலின ஈர்ப்பாளர் உறவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாக டூட்டி சந்த் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதே ஆன டூட்டி சந்த், தற்போது உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சியில் கவனம் செலுத்திவருகிறார். எதிர்காலத்தில் தனது தோழியை மணப்பதே தனது விருப்பம் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் ஒரு பெண் தடகள வீராங்கனை தான் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்று தெரிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
உச்ச நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு தன் பாலின உறவில் ஈடுபடுவது தவறல்ல என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.