ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 59ஆவது தேசிய அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், 100 மீ ஓட்டப்பந்தய பிரிவின் அரையிறுதிப் போட்டியில் நட்சத்திர தடகள வீராங்கனை டூட்டி சந்த், பந்தய இலக்கை 11.22 விநாடிகளில் கடந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், குறைந்த நேரத்தில் 100 மீ இலக்கை கடந்து தேசிய அளவில் தான் படைத்த முந்தைய சாதனையை (11.26 விநாடிகள்) முறியடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார். பந்தய இலக்கை 11.25 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா சுசீந்திரன் வெள்ளிப் பதக்கமும், ஹிமாஸ்ரீ ராய் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.