ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 21ஆவது சீசனை நடத்த ஆர்வமுள்ள நாடுகள் பங்கேற்கும் ஏலத்திற்கான அறிவிப்பு ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பின்(ஓசிஏ) மூலம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்நிலையில் ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நாடுகள் தங்களது ஏல விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாக ஏப்ரல் 22ஆம் தேதியை ஓசிஏ நிர்ணயித்திருந்தது.
இந்நிலையில் ஓசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கத்தார் தலைநகர் தோஹாவும், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தும் 21ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஓசிஏவுக்கு அதிகாரப்பூர்வ ஏல ஆவணங்களை சமர்பித்துள்ளன. மேலும் அந்தந்த நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழுவின் ஏல ஆவணத்தில், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நகரத்தின் கடிதங்களும், அதற்கான அரசு ஆதரவு கடிதங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனால் 2030ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இரு வலிமைமிக்க நாடுகள் முன்வந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளை, பெரிய அளவில் வழங்குவதன் மூலம் ஆசியாவில் ஒலிம்பிக் கூட்டமைப்பு மீதான நற்பெயரையும், நம்பிக்கையையும் இது மேம்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.