அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் ஆக. 29ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடர் என்பதால் இத்தொடருக்கு எதிர்பார்ப்பு எகிறி வந்தது.
இந்தாண்டின் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன் என 2 கிராண்ட்ஸ்லாமை ஸ்பெயின் நாட்டு வீரர் நடால் வென்றிருந்தார். அடுத்து நடைபெற்ற விம்பிள்டன் தொடரின் அரையிறுதியில் நடால் காயம் காரணமாக விலகினார். மேலும், விம்பிள்டன் தொடரை ஜோகோவிச் வென்று அசத்தினார்.
இதனால், கிராண்ட்ஸ்லாம் பந்தயத்தில், முன்னிலையில் இருக்கும் நடாலை (22 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்ய, ஜோகோவிச்சிற்கு (21 கிராண்ட்ஸ்லாம்) இன்னும் ஒரு கிராண்ட்லாமை வெல்ல வேண்டும். எனவே, ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமில் இதற்கு போட்டா போட்டி நடக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அதையெல்லாம் சுக்குநூறாக்கும் வகையில், அமெரிக்க ஓபன் தொடரில் பங்கேற்க ஜோகோவிச்சிற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"துரதிருஷ்டவசமாக, அமெரிக்க ஓபனில் பங்கேற்க என்னால் நியூயார்க் நகரத்திற்கு செல்ல முடியாது" என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க செல்ல வேண்டும் என்றால், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால், ஜோகோவிச் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தாததால், அவரால் அமெரிக்க பயணிக்க இயலாது.
செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச், ஏற்கெனவே இதே காரணத்தால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து, ஜோகோவிச் தற்போது இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரை தவறவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்... பதக்கத்தை உறுதி செய்த சாத்விக், சிராக் இணை