லண்டன்: ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் ஜூன் 27ஆம் தேதி தொடங்கின.
இத்தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று (ஜூலை 3) நடந்த நான்காவது சுற்றுப்போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச், 104ஆவது நிலை வீரரான நெதர்லாந்தின் டிம் வான் ரிஜ்தோவன் உடன் மோதினார்.
வழக்கமாக, எதிரே விளையாடுபவருக்கு முதல் செட்டை தானம் கொடுக்கும் வழக்கமுடைய ஜோகோவிச், நேற்றைய போட்டியில் முதல் செட்டை (6-2) என கைப்பற்றினார். அதற்குப் பதிலாக இரண்டாவது செட்டை (4-6) ஜோகோவிச் தவறவிட்டார்.
83ஆவது வெற்றி: இதைத் தொடர்ந்து, சுதாரித்துக்கொண்ட அவர் அடுத்த இரண்டு செட்களை (6-1, 6-2) எளிதாக வென்று ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம், இந்தப் போட்டியை 3 - 1 என்ற செட் கணக்கில் வென்ற ஜோகோவிச் அடுத்த காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார். விம்பிள்டன் தொடர்களில் இது அவரின் 83ஆவது வெற்றியாகும்.
மேலும், விம்பிள்டனில் 13ஆவது முறையாக காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். அவர் புல்தரை ஆடுகளத்தில் விளையாடிய கடைசி 25 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் அனைத்தையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜொலிப்பாரா ஜோகோவிச்: நடப்பு சாம்பியனான ஜோகோவிச், கடந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன் என மூன்று கிராண்ட்ஸ்லாமை வென்றிருந்தார். மேலும், அமெரிக்க ஓபன் தொடரில் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவிடம் தோல்வியடைந்து, ஓர் ஆண்டின் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் அரிய வாய்ப்பை தவறவிட்டார்.
விம்பிள்டனை தக்கவைப்பாரா?: இதைத்தொடர்ந்து, இந்தாண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் சிக்கியதால் விசா கிடைக்காமல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. சமீபத்தில் நடந்த பிரஞ்சு ஓபனிலும் இறுதிப்போட்டி வரை வந்து நடாலிடம் படுதோல்வியடைந்தார், ஜோகோவிச். எனவே, மீண்டும் ஃபார்மிற்கு வரும் வகையில், அவர் விம்பிள்டனை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளார்.
காலிறுதிப்போட்டியில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த உலகின் 9ஆவது நிலை வீரரான ஜானிக் சின்னர் உடன் ஜோகோவிச் நாளை (ஜூலை 5) மோத உள்ளார்.
இதையும் படிங்க: ENG vs IND:பேர்ஸ்டோவ் சதத்தையும் சமாளித்தது இந்தியா - தொடரும் ஆதிக்கம்!