தலைநகர் டெல்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று மகளிர் 68 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நருஹா மத்சுயுகி (Naruha Matsuyuki) உடன் மோதினார்.
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திவ்யா 6-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம், இந்த தொடரில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் 2018இல் தங்கம் வென்றிருந்தார்.
மகளிர் 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை நிர்மலா தேவி 10-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டவுலேட்பைக் யாக்ஷிமுரடோவாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் அவர் ஜப்பான் வீராங்கனை மிஹோ இகாராஷியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.