கத்தார் தலைநகர் தோஹாவில் 14ஆவது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் இளையோருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவின் ஆடவர் தனி நபர் மற்றும் குழு ஆட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்.
தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் அவர் 248.2 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இரண்டாம் இடம்பிடித்த சீன வீரர் வெள்ளியும், மூன்றாம் இடம் பிடித்த மற்றொரு இந்திய வீரர் ஷாகு துஷர் வெண்கலமும் வென்றனர். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் ஹிருதே ஹசாரிக்கா ஏழாம் இடம் பிடித்தார். இந்திய வீரர்கள் மூவரும் முன்னதாக 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் குழுவாக தங்கம் வென்றனர்.
இதேபோன்று 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் போட்டியிலும் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தெலங்கானாவைச் சேர்ந்த தனுஷிற்கு செவித்திறன் குறைப்பாடு உள்ளது. 16 வயது நிரம்பியுள்ள தனுஷ் ஸ்ரீகாந்த்தின் முதல் சர்வதேச தொடர் இதுவாகும்.
இதன்மூலம் செவித்திறன் குறைப்பாடு உள்ள இந்திய வீரர் ஒருவர் கலந்து கொண்ட முதல் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் தொடரிலேயே மூன்று தங்கங்களை கைப்பற்றினார் என்ற சாதனையை தனுஷ் ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.
இந்தத் தொடரின் கலப்பு இரட்டையர் ஸ்கீட் பிரிவில் அங்கத் வீர் சிங் பாஜ்வா, கேன்மாத் சேகோன் ஆகியோர் அடங்கிய இந்திய இணை நூழிலையில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளியைக் கைப்பற்றியது. நடப்புத் தொடரில் இந்திய அணி இதுவரை 24 தங்கம், 22 வெள்ளி, 22 வெண்கலம் உள்ளிட்ட 68 பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது.