உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்.
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர், சுவிட்சர்லாந்தின் ஸ்டீஃபன் ரைய்ச்முத்துவை (Stefen Reichmuth) 8-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இந்தத் தொடரில் இந்திய நட்சத்திரங்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், ரவிக்குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றதால், இவர் தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த இறுதிப் போட்டியில் அவர், ஈரான் வீரர் ஹசான் யாஸ்டனிசராட்டியுடன் (Hassan Yazdanicharati) மோதவிருந்தார். இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், இவர் போட்டியில் பங்கேற்கவில்லை என்பதால் இவருக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்து.
இது குறித்து தீபக் புனியா கூறுகையில், "தங்கப் பதக்கதுக்கான இன்றையப் போட்டியில் என்னால் பங்கேற்க முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது. இருப்பினும், இந்தத் தொடரில் எனது சிறப்பான ஆட்டத்திறனை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன்" என்றார்.
முன்னதாக, இந்தத் தொடரில் இவர் அரையிறுதிச் சுற்று முன்னேறியதன்மூலம், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நான்காவது இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.