உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாளுக்கு நாள் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் உலகம் முழுவதும் அனைத்து விதமான விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கரோனா அச்சுறுத்தலினால் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் 124 ஆண்டுகால வரலாற்றில் ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ளது என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டோக்கியோ ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் யோஷிரோ மோரி, ஒருபோதும் மீண்டும் ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யோஷிமோரா கூறுகையில், விளையாட்டு நிர்வாகங்களின் நிலையை வைத்து பார்த்தால், ஒலிம்பிக் தொடரை இரண்டு ஆண்டுகள் ஒத்திவைப்பது என்பது இயலாத ஒன்று. மேலும் ஜப்பான் பிரதமர் அபே விடம் ஏற்கெனவே நான் ஒலிம்பிக் தொடரை இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்க பேசியுள்ளேன். ஆனால் அவர் ஒரு ஆண்டுக்கு மட்டும் ஒத்திவைக்கும் முடிவில் நிலையாக இருந்தார். அதன் காரணமாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ஓராண்டிற்கு ஒத்திவைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘சச்சின் பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை’