உலகின் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக திகழ்வது டபிள்யூ.டபிள்யூ.ஈ (WWE) எனப்படும் உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா என பல நாட்டிலும் மிக பிரபலான பொழுது போக்கு நிகழ்ச்சியாகும். மேலும் இதில் நடைபெறும் ரா (RAW), ஸ்மாக் டவுன் (Smack Down) உள்ளிட்ட நிகழ்வுகள் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று நடைபெற்று வருவதாகும்.
அந்த வகையில் உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் மிக முக்கிய நிகழ்வான ரெஸில்மேனியா (wrestle mania) நிகழ்வின் 36ஆவது சீசன், ஃப்ளோரிடாவிலுள்ள டெம்பா பே நகரில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல உலக நாடுகள் அச்சமடைந்துள்ள நிலையில், பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான WWE நிகழ்ச்சிகளும் தற்போது ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது. அதற்கு, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வின்ஸ் மெக்மஹோன் (Vince McMahon) முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் முதல்முறையாக இந்நிகழ்ச்சியின், ரெஸ்சல்மேனியா நிகழ்வுகள் பார்வையாளர்களின்றி, ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்வில், நிகழ்ச்சியாளர்கள், ஒரு சில முக்கிய நபர்களைத் தவிர மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது எனவும், இந்நிகழ்வுகளை பொதுமக்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் (WWE TV) கட்டண முறையில் கண்டுகளிக்கலாம் எனவும், வழக்கம் போல நிகழ்வுகள் நேரலையிலும் ஒளிப்பரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வார நிகழ்வுகளான ஸ்மாக் டவுன் (Smack Down), ரா (RAW) ஆகிய நிகழ்வுகளும் பார்வையாளர்களின்றியே நடைபெறுமென்று அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சிகளில் பொழுதுபோக்கு சூப்பர் ஸ்டார்களான ஜான் சேனா (John Cena), ப்ரோக் லெஸ்னர் (Brock Lesnar), ரோமன் ரெங்ஸ் (Roman Reigns), அண்டர்டேக்கர் (Undertaker), கோல்ட்பர்க் (Goldberg) ஆகியோர் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை கேட்ட ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், எப்பொழுதும்போல் இந்த ஆண்டும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து நிம்மதியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ரெஸில்மேனியா நிகழ்வினை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் நேரில் கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கொரோனா பீதி: பயிற்சியை ஒத்திவைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!