பர்மிங்ஹாம்:22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இத்தொடரின் 7ஆம் நாளான நேற்று (ஆக. 4) இந்தியா, குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல், நீளம் தாண்டுதல் பேட்மிண்டன், ஹாக்கி, தடகளம் ஆகிய போட்டிகளில் பங்கேற்றது. நேற்றைய தினத்தில், இந்தியா பளு தூக்குதல் மற்றும் நீளம் தாண்டுதலில் முறையே தலா ஒரு தங்கம், வெள்ளி என 2 பதக்கங்களை வென்றது.
பளு தூக்குதல்:இந்தியா சார்பில் பாரா பளு தூக்குதல் ஆடவர் ஹெவிவெயிட் பிரிவின் இறுதிப்போட்டியில் சுதிர் பங்கேற்றார். அவருக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் முதல் இரண்டு வாய்ப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். முதல் வாய்ப்பில் 208 கிலோவையும், 2ஆவது வாய்ப்பில் 212 கிலோவையும் தூக்கி முதலிடத்தில் இருந்தார்.
ஆனால், 3ஆவது வாய்ப்பில் 217 கிலோவை அவரால் வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை. இருப்பினும், வேறு யாரும் 212 கிலோவை எட்டாததால், சுதிர் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
மேலும், 134.5 புள்ளிகளை பெற்றதன் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் அதிகபட்ச புள்ளிகளை அடைந்தவர் என்ற சாதனையை படைத்தார். 27 வயதான இவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். இவர், கடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தடகளம்:சமீபத்தில் நடந்து முடிந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் மிகுந்த கவனத்தை பெற்றார். நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியிலும் அவர் பங்கேற்றார். இப்போட்டியில், அவர் 8.08 மீ. நீளம் தாண்டி இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.
பாஹாமாஸ் நாட்டைச் சேர்ந்த லகுவான் நைரன் தங்கம் வென்றார். நரைனும், முரளியை போன்று 8.08 மீட்டரை தாண்டினார் என்றாலும், அவரின் இரண்டாவது அதிகபட்ச தூரம் 7.98 மீட்டர் ஆகும். ஆனால், முரளியின் இரண்டாவது அதிகபட்ச தூரம் 7.84 மீட்டர்தான். எனவே, முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்ற நேர்ந்தது.
நீளம் தாண்டுதலில், இந்தியாவின் மற்றொரு வீரர் முகமது அனீஸ் யஹியா 7.97 மீட்டருடன் 5ஆவது இடத்தை பிடித்தார். ஹிமா தாஸ் 200 மீட்டர் மகளிர் ஒட்டப்பந்தயத்தின் அரையிறுதி சுற்றுக்கும், மஞ்சு பாலா சங்கிலி குண்டு எறிதல் மகளிர் இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்றனர்.
குத்துச்சண்டை: இந்தியாவின் ரோஹித் டோகாஸ் ஆடவர் வெல்டர்வெயிட் பிரிவின் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மேலும் குத்துச்சண்டை போட்டியில், அமித் பங்கல் ஆடவர் ஃபிளைவெயிட் பிரிவிலும், ஜெய்ஸ்மின் லம்போரியா மகளிர் லைட்வெயிட் பிரிவிலும், சாகர் அஹ்லாவத் ஆடவர் சூப்பர் ஹெவிவெயிட் பிரிவிலும் காலிறுதியில் வெற்றிபெற்று, இந்தியாவுக்கு குறைந்தபட்சம் மூன்று வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தனர்.
டேபிள் டென்னிஸ்:நடப்பு சாம்பியனும் இந்திய வீராங்கனையுமான மணிகா பத்ரா, டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 4-0 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளா். மேலும், இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, ரீத் டென்னிஸன் ஆகியோர் மகளிர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பேட்மிண்டன் & ஹாக்கி: பேட்மிண்டன் மகளிர் பிரிவில் பிவி சிந்து, ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆடவர் பிரிவில் கிதாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஹாக்கி ஆடவர் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இதில், ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் 7ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:காமன்வெல்த் போட்டிகள் - 200 மீ ஓட்டப்பந்தயத்தில் அரையிறுதிக்கு ஹிமா தாஸ் முன்னேற்றம்!