சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 9) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பதக்கம் பெற்ற சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லிகல், பெருமைமிகு பி.வி.சிந்து, ஆற்றல்மிகு லக்ஷ்யா சென், ஆதிக்கமிகு நிக்கத் சரீன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர், மகளிர் கிரிக்கெட் அணியினர் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
மேலும், நாட்டுக்காக தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள். இனி வருபவை யாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார். இதில், சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் விளையாட்டின் இறுதிநாளான நேற்று (ஆக. 8) இந்தியா சார்பாக டேபிள் டென்னிஸில் சரத் கமல் தங்கமும், சத்தியன் ஞானசேகரன் வெண்கலமும் வென்றனர். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து, ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென் ஆகியோர் தலா 1 தங்கத்தை பெற்று அசத்தினர்.
மேலும், பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடியும் தங்கம் வென்று மிரட்டியது. ஆடவர் ஹாக்கியின் இறுதிப்போட்டியில், இந்தியா 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளியை கைப்பற்றியது. இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4ஆவது இடத்தில் நிறைவுசெய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நிறைவுபெற்றது காமன்வெல்த் தொடர்; இந்தியாவுக்கு மொத்தம் எத்தனை பதக்கம்...? - முழுவிவரம்