சின்சினாட்டி: சின்சினாட்டி சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று (ஆகஸ்ட் 21ஆம் தேதி) நடைபெற்றது. இதில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் கார்லோஸ் அல்கராஸ் - நோவாக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கார்லோஸ் அல்கராஸ் கைப்பற்றினார். அதனையடுத்து தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-6 (9-7), 7-6 (7-4) என்ற புள்ளி கணக்கில் அடுத்த இரண்டு செட்டையும் வென்றார். இதன் மூலம் 3 மணி நேரம் 49 நிமிடம் நடைபெற்ற இந்த அட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த கார்லோஸ் அல்கராஸை 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற கணக்கில் வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதையும் படிங்க:IND VS Ire 2nd T20 : அயர்லாந்தை ஊதித்தள்ளிய இந்திய வீரர்கள்! தொடரை கைப்பற்றியது!
கோவிட் -19 காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு ஜோகோவிச் அமெரிக்காவில் தனது முதல் போட்டியை விளையாடுகிறார். இவர் மூன்றாவது முறையாக சின்சினாட்டி சர்வதேச ஓபன் டென்னிஸ் கோப்பையை கைப்பற்றி உள்ளார். முன்னதாக 1970ல் 35 வயதுடைய கென் ரோஸ்வால் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல் நேற்று நடைபெற்ற பெண்கள் ஓற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் கோகோ காஃப் 6-3, 6-4 என்ற கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதனையடுத்து பட்டம் வென்ற பின்பு பேட்டியளித்த ஜோகோவிச்; “நான் சொல்வதற்கு அதிகம் உள்ளது. ஆனால் அதை எல்லாம் கூறுவதற்கு ஆற்றல் உள்ளதா என்று தெரியவில்லை. மேலும் எந்த போட்டியிலும் இல்லாத பரபரப்பு இந்த போட்டியில் இருந்தது. இதை நான் கிராண்ட்ஸ்லாம் போல் உணர்கிறேன். நாங்கள் மீண்டும் நியூயார்க்கில் சந்திப்போம் என்று நம்புகிறேன். மேலும், இந்த கோப்பை எனக்கானது அல்ல. எனது ரசிகர்களுக்கானது” என்றார்.
இதையும் படிங்க:உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சூடு... பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீரர்கள்!