சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தக் கொடிய வைரஸ் காரணமாக சீனாவில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக தினந்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவதால் இதனை உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனமாக அறிவித்தது. இதனால் உலக நாடுகள் சீனாவுடனான போக்குவரத்தைத் துண்டித்துள்ளன.
இதனிடையே கொரோனோ வைரஸ் பாதிப்பால் இந்தாண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ஷாங்காய் நகரில் நடைபெறுவதாக இருந்த சீன கிராண்ட்ப்ரீ ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படும் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் பல்வேறு நாடுகளில் உள்ள பந்தயக் களங்களில் நடத்தப்படும். அதில் சீனாவின் உள்ள ஷாங்காய் நகரும் ஒன்றாகும். இங்கு 2004ஆம் ஆண்டு முதல் பந்தயம் நடத்தப்படுகிறது. ஆனால் சீனாவில் கொரோனோவால் ஏற்பட்ட பாதிப்பால் அங்கு நடத்த திட்டமிட்டிருந்த பல்வேறு போட்டிகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த ஃபார்முலா ஒன் பந்தயமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.