சர்வதேச கைப்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிருக்கான உலகக்கோப்பை கைப்பந்து போட்டி ஜப்பானில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பலம் பொருந்திய சீன அணி கேமரூன் அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்திவந்தது. அந்த அணி தனது ஆக்ரோஷ ஆட்டத்தின் மூலம் முதல் செட்டை 25- 18 என கைப்பற்றியது.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சீனா அடுத்தடுத்து இரண்டு செட்களையும் 25-14, 25- 19 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இதன்மூலம் சீன மகளிர் கைப்பந்து அணி 25-18, 25-14, 25-19 என்ற நேர்செட் கணக்கில் கேமரூன் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் சீனா அணி உலகக்கோப்பை கைப்பந்து தொடரில் ஆறு புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. கேமரூன் அணி புள்ளிகள் ஏதுமின்றி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.