கோவிட்-19 பெருந்தொற்று உலக நாடுகளைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறுமென ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்திருந்தார்.
ஆனால் கனடா ஒலிம்பிக் கூட்டமைப்பு தங்களது வீரர்களின் பாதுகாப்பை மனத்தில் வைத்து, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பப் போவதில்லை என நேற்று அறிவித்துள்ளது.
இது குறித்து கனடா ஒலிம்பிக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், எங்களுக்கு விளையாட்டை விட வீரர்களின் உடல்நலன், பொதுமக்களின் பாதுகாப்பின் மீதே அக்கறை உள்ளது.
மேலும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரை அடுத்தாண்டுவரை ஒத்திவைக்காவிட்டால், கனடா வீரர்கள் யாரும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கப்போவதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடா ஒலிம்பிக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் இது குறித்து ஆலோசனை மேற்கொண்ட சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு, அனைத்து பங்குதாரர்கள் குழுவினர் இன்னும் நான்கு வாரத்திற்குள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:கோவிட்-19: உலகக்கோப்பை குதிரையேற்றத் தொடர் நிறுத்திவைப்பு!