ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், கரோனா தொற்று அச்சம் காரணமாக வரும் 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, பாரீஸ் நகரில் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக நடனம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரேக் டான்ஸ் போட்டியை சேர்த்துள்ளனர்.
"டான்ஸ் தெரியும் அதென்ன பிரேக் டான்ஸ்" என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், அட அது வேறவொண்ணும் இல்லிங்க... செந்தில் ஒரு படத்துல டீ கடையில் ரேடியோல ரீப்பீட் மோடுல பாட்ட போட்டு தீயா பிராக்டீஸ் பண்ணுவாரே அதே தான்...
திறமைவாய்ந்த டான்சர்ஸ் எல்லாம் ஒரு கையால தரையில பேலன்ஸ் பண்ணி, மொத்த உடம்பையும் மேல தூக்கி ஆடுவாங்க, காலால ஆடவேண்டிய டான்சை சில சமயத்துல தலையால கூட இவங்க ஆடுவாங்கனா பாருங்களேன்.
இதற்காக பிரேக் டான்சில் சிறந்து விளங்கும் போட்டியாளர்களில் 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் கலந்துகொள்வார்கள். ஒலிம்பிக் போட்டியை காண அதிகளவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாரீஸின் ஒலிம்பிக்கின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்கின்றனர். ஒரே எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் இதில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஸ்கேட் போர்டிங், ஸ்போர்ட் கிளிம்பிங் மற்றும் சர்ஃபிங் ஆகிய விளையாட்டுகளும் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளன என அறிவிப்பு வெளியாகி உள்ளது.