ரியோ டி ஜெனிரோ:ரியோ டி ஜெனிரோ நீதிமன்றம் பிரேசில் கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் ரோட்ரிகஸ் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தேர்தலில் முறைகேடு செய்ததாக கூறி நீக்கியது. இதனையடுத்து சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான ஃபிஃபா எங்களது அமைப்பில் அரசு மற்றும் மூன்றாம் தரப்பு தலையீட்டினை விரும்ப மாட்டோம் எனவும், இதனால் 5 முறை உலகக் கோப்பை சாம்பியனான பிரேசில் அணியை முக்கிய போட்டிகளில் இருந்து நீக்கும் நிலை வரும் எனவும் கூறி நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துள்ளது.
மேலும் ஃபிஃபா அமைப்பு பிரேசில் கால்பந்தாட்ட அணியின் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பிரேசில் கால்பந்தாட்ட அமைப்பு எட்னால்டோ ரோட்ரிகஸை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தேர்தலை நடத்த முனைப்பு காட்டினால் ஃபிஃபா அமைப்பிலிருந்து இடைநீக்கத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபிஃபா மற்றும் தென் அமெரிக்கா கால்பந்தாட்ட அமைப்பு (CONMEBOL) ஜனவரி 8ஆம் தேதி பிரேசிலில் குழு அமைத்து இந்த விவகாரம் பற்றி விவாதிக்க போவதாக முடிவெடுத்துள்ளது. ஃபிஃபா மற்றும் தென் அமெரிக்கா கால்பந்தாட்ட அமைப்பு குழு அமைத்து விசாரிக்கும் வரை பிரேசில் கால்பந்தாட்ட அமைப்பை பாதிக்கும் எந்த முடிவும் எடுக்கப்படாது என தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரேசில் கால்பந்தாட்ட அமைப்பு நீக்கப்பட்டால் இடைநீக்கம் ரத்து செய்யும் வரை ஃபிஃபா அமைப்பில் பிரேசில் அணியின் உறுப்பினர் பதவி நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.