தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2019 Best Sports Moments: உலக ராபிட் செஸ் வென்ற இந்தியர், மாஸ் காட்டிய தமிழர்கள்! - 2019 விளையாட்டின் முக்கிய நிகழ்வுகள்

2019ஆம் ஆண்டில் மற்ற விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த வீரர்கள், சர்ச்சையில் சிக்கிய வீரர்கள் குறித்த பார்வை.

Best Sports Moments in 2019

By

Published : Jan 1, 2020, 2:26 AM IST

1. உலக ராபிட் செஸ்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மகளிர் உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஹம்பி கொனேரு சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார். ஆந்திராவைச் சேர்ந்த 32 வயதான இவர், குழந்தை பெற்றதால் 2017, 2018 என இரண்டு ஆண்டுகளாக எவ்வித போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதையடுத்து, மீண்டும் விளையாடத் தொடங்கிய இவர் ஓராண்டுக்குள்ளாகவே உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

2. ரஷ்யாவிற்கு 4 ஆண்டு தடை

இந்தாண்டு (2020) டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், 2019ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியானது. ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான வாடா (WADA) விசாரணை மேற்கொண்டது.

அப்போது ஊக்கமருந்து பயன்படுத்திய ரஷ்ய வீரர்களின் பரிசோதனை மாதிரிகளை மாற்றிவைத்தது, ஊக்கமருந்து பயன்படுத்திய வீரர்கள் குறித்த தகவல்களை ரஷ்யா அழித்தது உள்ளிட்ட குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டன.

இதன்விளைவாக உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு, ரஷ்யாவுக்கு அனைத்துவிதமான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகளுக்குத் தடைவிதித்து 2019 டிசம்பர் 9ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால், 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் ரஷ்யா பங்கேற்க முடியாத சூழல் உருவானது.

3. இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை

ரஷ்யாவைத் தொடர்ந்து இந்திய பளுதூக்குதல் வீராங்கனையும் 2017இல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றவருமான சீமா ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கினார். 2019ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய மகளிர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றபோது அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.

சீமா

அதில், அவரது உடலில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பொருள்களான ஹைட்ராக்சி-4-டெமாக்சிபென், மெட்டினோலோன், ஸ்டீராய்ட் ஆஸ்டரைன் உள்ளிட்ட பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அவருக்கு நான்கு ஆண்டு தடைவிதித்தது.

4. தங்கவேட்டை நடத்திய ஹிமா தாஸ்

ஹிமா தாஸ்

2018இல் 20 வயதுக்குள்பட்டோருக்கான சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற அஸ்ஸாமைச் சேர்ந்த விவசாயி மகள் ஹிமா தாஸுக்கு அந்த ஆண்டு மேலும் சிறப்பாகவே இருந்தது. ஜூலை, ஆகஸ்ட் என இரண்டு மாதங்களில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இவர் ஆறு தங்கப் பதக்கங்கள் வென்றதன் மூலம், ஐரோப்பாவிலும் இவரது கொடி பறந்தது. 'திங் எக்ஸ்பிரஸ்' என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் ஃபோர்ப்ஸ் இந்தியா நாளிதழில் டாப் 30-க்குள் இடம்பிடித்தார். மேலும், யுனிசெஃப் இந்தியாவின் முதல் இளம் தூதராகவும் நியமிக்கப்பட்டார் இந்தத் தங்க மங்கை.

5. கோமதி மாரிமுத்துவின் தங்கமும் சர்ச்சையும்

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீ ஓட்டப்பந்தயப் பிரிவில் கலந்துகொண்ட கோமதி மாரிமுத்து, இரண்டு நிமிடம் 2.7 மணித்துளிகளில் கடந்து பதக்கம் வென்றார். திருச்சி அருகேயுள்ள முடிகண்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, வறுமையையும் தாண்டி இச்சாதனையைப் படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

கோமதி மாரிமுத்து

அதன்பின் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படலாம் என்றும், அவருக்கு தடைவிதிக்கப்படும் என்றும் இந்திய தடகள கூட்டமைப்பின் அலுவலர் ஒருவர் கூறியிருந்தார். எனினும் அதன்பின் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வழங்கப்படாமலிருந்து-வருவதால் கோமதி மாரிமுத்துவின் தங்கம் தப்புமா என்பதற்கு காலம்தான் பதில்கூற வேண்டும்.

6. சர்ச்சையை கிளப்பிய டூட்டி சந்த்

தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று இந்திய நட்சத்திர தடகள வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்தது பெரும் சர்ச்சையானது. மேலும், தனது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாழ ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்த அவரின் பேச்சுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

டூட்டி சந்த்

இந்தச் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும், அது அவரது ஆட்டத்திறனை பெரிதும் பாதிக்கவில்லை. குறிப்பாக உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இத்தாலியின் நபோலியில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டின் 100 மீட்டர் போட்டியில் அவர் இச்சாதனையைப் படைத்தார்.

7. வீரமங்கை ஆரத்தி அருணின் கதை

கனடாவில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஆரத்தி அருண், மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்துள்ளார். இந்தியாவுக்கு இத்தகையைப் பெருமையைத் தேடித்தந்த இவர், அடிப்படையில் பல் மருத்துவராவார். மகப்பேறுக்குப் பின் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தபோதுதான் பவர் லிஃப்டிங் பயணத்தைத் தொடங்கினார் இந்த வீரமங்கை.

8. உலகக்கோப்பையில் 2 தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை!

இளவேனில் வாலறிவன்

ஜூலை மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற தொடர் மூலம் முதல்முறையாக உலகக்கோப்பையில் பங்கேற்ற இவர், 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று அதகளப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, நவம்பரில் சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் அதே மேஜிக்கை வெளிப்படுத்தி 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றார். 2019இல் அசத்திய இவர், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அசத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

9. உலகளவில் சாதனைப் படைத்த முதல் தமிழர்!

கெட்டில்பெல் விளையாட்டு இங்கு பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பளுதூக்குதல் விளையாட்டில் கிளின் அண்ட் ஜெர்க் முறையில் பளுவைத் தூக்க வேண்டும். இதில், இரும்பு குண்டு மேல் இருக்கும் கைப்பிடியை தூக்கி 10 நிமிடங்கள் மேலே நிறுத்த வேண்டும்.

கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்

எத்தனை முறை, கெட்டில்பெல்லை தூக்குகிறோம். எவ்வளவு நிமிடங்களுக்கு அதை மேலே நிறுத்துகிறோம் என்பது கணக்கில் கொள்ளப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன்மூலம், இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் தமிழ்நாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

பையத்லான் பிரிவில் 48 கிலோவை தூக்கியதன் மூலம் இவருக்குத் தங்கம் கிடைத்தது. இதுமட்டுமின்றி, அரை மாரத்தான் பிரிவில் 30 நிமிடம் இடைவிடாது கெட்டில்பெல்லை தூக்கிநின்று 232 புள்ளிகள் பெற்ற இவருக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது. இவர் ஏற்கனவே 2018இல் ஆசிய கெட்டில்பெல் சாம்பியன்ஷிப் பிரிவில் தங்கம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

10.மேரி கோமின் மேலும் ஒரு சாதனை

மேரி கோம்

ரஷ்யாவில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குத்துச்சண்டை நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அரையிறுதிவரை முன்னேறியதால் இத்தொடரில் ஏழாவது தங்கம் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அப்போட்டியில் துருக்கியின் பஸெனஸ் சகிரோக்லுவிடம் (Busenaz Cakiroglu) தோல்வியுற்றதால் அவரால் வெண்கலம் மட்டுமே வெல்ல முடிந்தது. இருப்பினும் உலக சாம்பியன்ஷிப்பில் எட்டாவது பதக்கம் வென்று அதிக பதக்கம் வென்ற நபர் என்ற மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் மேரி கோம்

11. மாஸ் கம்பேக் கொடுத்த பெங்கால் வாரியர்ஸ்!

புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசனுக்கான இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளும் இறுதிச் சுற்றில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

புரோ கபடி

ஆட்டத்தின் முதல் ஏழு நிமிடங்களில் 3-11 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த பெங்கால் அணி, கபடி போட்டிகளில் வீரரை திருப்பிபோடுவது போல் ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்திலிருந்து ஒட்டுமொத்த போட்டியையும் தங்களது ஆட்டத்தால் திருப்பிப் போட்டது. இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி தனது முதல் புரோ கபடி பட்டத்தை வென்றது.

12. தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மாஸ்!

கடந்த ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர்கள் / வீராங்கனைகள் தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, ஜுடோ, டேக்வாண்டோ, கபடி, நீச்சல், வுஷூ,பளு தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என மொத்தம் 312 பதக்கங்களைக் குவித்து பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினர்.

13. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியர் வெள்ளி

ஏ.ஐ.பி.ஏ. (AIBA) சார்பில் 2019 செப்டம்பரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில், ஆடவர் 52 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் வீரர் அமித் பங்கல் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனும் உஸ்பெகிஸ்தான் வீரருமான ஸோய்ரோவிடம் தோல்வி அடைந்தார்.

அமித் பங்கல்

இதனால், அமித் பங்கலுக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்ததாலும், உலக குத்துச்சண்டை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 2019இல் வெள்ளி வென்ற இவர், இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

14. புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பயணம்!

இங்கிலாந்தின் டார்செட் பகுதியைச் சேர்ந்த நிக் பட்டர், ஆண் விரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்கு அனைத்து நாடுகளிலும் (196) நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். 2018 ஜனவரி 6ஆம் தேதி மாரத்தான் மூலம் உலகத்தை சுற்ற ஓடத் தொடங்கிய இவரது கால்கள், நவம்பர் 10ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின் மூலம் ஓட்டத்தை நிறுத்தியது.

நிக் பட்டர்

22 மாதங்கள், 10 நுழைவு இசைவுகள் (விசாக்கள்), 196 நாடுகள், 455 விமானங்கள் என மாரத்தான் மூலம் உலகம் சுற்றிவந்த இவர், ஆண் விரைப்பை புற்றுநோய்க்காக 59 லட்ச ரூபாய் நிதி திரட்டினார். இதற்காக நாய்களிடம் கடி வாங்கி துப்பாக்கியில் சுடப்பட்டு, கத்திமுனையில் இவரது பணம், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு சிறைக்குச் சென்று புற்றுநோய் விழிப்புணர்வுக்காக வாழ்வில் பல கீறல்களைச் சந்தித்தார்.

-25 டிகிரி செல்சியஸ் குளிர், 59 டிகிரி செல்சியஸ் வெப்பம் என இவர் பயணிக்காத காலசூழ்நிலை இல்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த கெவின் வெப்பர் என்கிற ஆண் விரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபரின் சந்திப்புதான் இவரை உலகத்தை சுற்றிவரத் தூண்டியது.

15. ரக்பி உலகக்கோப்பை வென்ற தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா

2019ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்திருந்தாலும், ரக்பி விளையாட்டைப் பொறுத்தவரையில் அந்த அணிக்கு சிறந்த ஆண்டாகத்தான் அமைந்தது. ஜப்பானில் நடைபெற்ற ரக்பி உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 32-12 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தங்களது மூன்றாவது உலகக்கோப்பையை வென்றது.

16. லூயிஸ் ஹாமில்டனுக்கு இது ஹாட்ரிக்

லூயிஸ் ஹாமில்டன்

ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவரும் பிரிட்டன் வீரர் லூயிஸ் ஹாமில்டன், 2019ஆம் ஆண்டின் ஃபார்முலா ஒன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றார். ஒட்டுமொத்தமாக அவர் வெல்லும் ஆறாவது பட்டம் இதுவாகும். இதன்மூலம் ஏழுமுறை உலக சாம்பியனான ஜெர்மனைச் சேர்ந்த முன்னாள் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கருக்கு அடுத்த இடத்தில் ஹாமில்டன் இடம்பிடித்துள்ளார்.

மெர்சிடிஸ் அணியில் களமிறங்கும் ஹாமில்டன், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற 21 சுற்றுகளில் பஹ்ரைன், சீன, ஸ்பானிஷ், மொனாக்கோ, கனடியன், பிரெஞ்சு, பிரிட்டீஷ், ஹங்கேரி, ரஷ்யன், மெக்சிக்கன், அபுதாபி உள்ளிட்ட பந்தயங்களில் முதலிடம் பிடித்தார்.

17. ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் ஃபீனிக்ஸ் பறவை மரணம்!

நிக்கி லவ்டா

ஃபார்முலா ஒன் பந்தயத்தில் மூன்று முறை உலகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய ஆஸ்திரியாவைச் வீரர் நிக்கி லவ்டா, உடல்நலக்குறைவால் தனது 70ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு ஃபார்முலா ஒன் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details