டெல்லி:கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெற்றது.
இத்தொடரின், நீளம் தாண்டுதல் போட்டியில் ஷைலி சிங் வெள்ளிப் பதக்கமும், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும், 10,000 மீட்டர் நடை பந்தயத்தில் அமித் காத்ரி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் மூன்று பதக்கங்களுடன் இந்தியா 21ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
வருங்கால வெற்றிக்கான அறிகுறி
இந்நிலையில், பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் உள்பட இத்தொடரில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், நாட்டுக்கு பதக்கங்களை குவித்து தந்திருக்கும் வீரர்களுக்கு பாராட்டுகள்.
தற்போது, இந்தியா முழுவதும் தடகளம் புகழ்பெற்று வருகிறது. வருங்கால வெற்றிகளுக்கு இது ஒரு நல்ல அறிகுறி. கடுமையாக உழைத்த வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.