ஹாங்சோவ்:ஆசிய பாரா விளையாட்டில் 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என 102 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில், இந்தியாவின் சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 போர் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், இறுதி நாளன இன்று இந்தியா 100 பதக்கங்களுக்கு மேல் குவித்து அசத்தி வருகிறது. தடகளம் ஆடவர் டி47 பிரிவில், இந்திய வீரர் திலீப் மஹத் காவித் 49.48 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பி.ஆர்.3 கலப்பு இரட்டையர் படகு போட்டியில் அணித மற்றும் நாரயணன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். வில்வித்தையில் பென்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஷீதல் தேவி 144-142 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூரின் அலிம் நூர் சாஹிடாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷீதல் தேவி நடப்பு போட்டியில் வென்ற 3 பதக்கம் இதுவாகும். முன்னதாக, அவர் காம்பவுன்ட் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார். இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 2 தங்கப்பதங்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், 100 பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “நமது வீரர்கள் 100 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த ஒரு கணம் இணையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் அதீத திறமை, கடின உழைப்பு, உறுதி ஆகியவையே காரணம்.
இந்த குறிப்பிடத்தக்க மைல்கல், நம் இதயங்களை மகத்தான பெருமையால் நிரப்புகிறது. எங்கள் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் முழு ஆதரவு அமைப்புக்கும் எனது ஆழ்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுவதாக அவை அமைகின்றன” என தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்களைப் பெற்று, நான்காவது இடத்தில் உள்ளது. 518 பதக்கங்களைப் பெற்று முதல் இடத்தில் சீனாவும், 150 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் ஜப்பானும், 124 பதக்கங்களைப் பெற்று மூண்றாவது இடத்தில் ஈரானும் உள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரக்கூடிய 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் (அக்-28) நிறைவு பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:AUS vs NZ: ஆஸ்திரேலியாக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு!