ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது நாளான நேற்று மகளிர் பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
அதன்படி 68 கிலோ எடைப் பிரிவில் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா, முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் 65 கிலோ எடை பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்று நவ்ஜோத் கவுர் சாதனை படைத்திருந்தார்.