சென்னை: ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. வரும் சனிக்கிழமை வரை நடக்கும் இந்த போட்டியில், இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், தென்கொரியா, மலேசியா ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், 5-ஆம் நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற போட்டியில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மலேசிய அணி சிறப்பாக விளையாடியது. ஆட்ட நேர முடிவில் 3 - 1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி ஜப்பானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் அணியாக மலேசிய அணி முன்னேறியது.
அதனைத் தொடரந்து, மாலை 6.15 மணிக்கு தொடங்கிய 11-ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - சீனா அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டத்தின் 33-ஆவது நிமிடத்தில் சீனா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. பின்னர், 39வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதன் மூலம், ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி வென்றது.