ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்று தொடர் ஜோர்டானில் நடைபெற்று வருகிறது. இதன் 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பூஜா ராணியும், 96 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிருஷனும் கலந்துகொண்டனர்.
இதில் பூஜா ராணியை எதிர்த்து தாய்லாந்தின் போர்னிபா சூட்டி (pornnipa chutee) களமிறங்கினார். இதில் ராணி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வெற்றிபெற்றார். இந்த வெற்றியால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பூஜா ராணி தகுதி பெற்றுள்ளார்.
இந்த வெற்றி குறித்து அவர் பேசுகையில், ”இந்தப் போட்டிக்கு முன்னதாக தாய்லாந்து வீராங்கனையுடன் நான் மோதியதில்லை என்பதால் மிகவும் பதற்றமாக இருந்தேன். இதைப் பற்றி பயிற்சியாளர்களிடம் கூறியபோது அவர்கள் எனக்கு நம்பிக்கையளித்தனர். 5-0 என வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார். வரவிருக்கும் அரையிறுதிச் சுற்றில் பூஜா ராணியை எதிர்த்து சீன வீராங்கனை லி குவான் களமிறங்கவுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் விகாஷ் கிருஷனை எதிர்த்து ஜப்பானின் ஒகஹாசா (okahaza) ஆடினார். இதில் ஓகஹாசாவை எதிர்த்து சிறப்பாக ஆடிய விகாஷின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. இந்தப் போட்டியில் விகாஷ் வெற்றி பெற்றதால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு, ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தகுதிபெற்றுள்ளார்.
இதையும் படிங்க:ஆஸி.யிடம் சரணடைந்த இந்திய அணி... டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!