ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வீரர், வீராங்கனைகள் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவர்.
அதன் அடிப்படையில் இந்திய நட்சத்திரங்களான மேரி கோம் (மகளிர் 51 கி.கி), சிம்ரன்ஜித் கவுர் (மகளிர் 60 கி.கி), லவ்லினா (மகளிர் 69 கி.கி), பூஜா ராணி (மகளிர் 75 கி.கி), அமித் பங்கல் (ஆடவர் 51 கி.கி), விகாஸ் கிருஷ்ணன் (ஆடவர் 69 கி.கி), ஆசிஷ் குமார் (ஆடவர் 75 கி.கி), சதீஷ் குமார் (ஆடவர் 91 கி.கி) ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.
இதில், விகாஸ் கிருஷ்ணன், சிம்ரன்ஜித் கவுரைத் தவிற மற்ற ஆறு வீரர்களும் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெண்கலம் பெற்றனர். குறிப்பாக, இந்தத் தொடரில் தங்கம் வெல்வார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆறுமுறை உலக சாம்பியனான மேரி கோம், 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் சீன வீராங்கனை யுவான் சங்குடன் போராடி தோல்வியடைந்தார். இதேபோல், உலகின் முதல்நிலை வீரரான அமித் பங்கல் 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜியான்குவான் ஹூவிடம் வீழ்ந்தார்.