இந்தியாவுடன் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வந்துள்ளது. இதில் முதலில் நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று துவங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். வார்னர் 1 ரன்னில் ஷமியின் பத்து வீச்சிலும், கவாஜா 1 ரன்னில் சிராஜ் பத்து வீச்சிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் மீட்டு நம்பிக்கை அளித்தனர். லபுஷேன் 49 ரன்களிலும், ஸ்மித் 37 ரன்களிலும் ஜடேஜாவிடம் விக்கெட் கொடுத்து வெளியேறினர். பின்னர் வந்த ரென்ஷாவும் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார்.
சிறிது நேரம் நிலைத்து ஆடிய அலெக்ஸ் கேரி அஸ்வின் பந்துவீச்சில் 36 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். இந்த 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 451 விக்கெட்டுகளை வீழ்த்தி, முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையையும், முதல் இந்திய மற்றும் ஆசிய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். சர்வதேச அளவில் விரைவாக 450 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில், இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஸ்வின் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: ஜடேஜா சுழலில் ஆட்டம் கண்ட ஆஸி., அணி.. இந்தியா அபார தொடக்கம்!