பிரேசில்:பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதில் ஒரு லீக் சுற்றில் பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றது. போட்டிக்கு முன்னதாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயோ பிரேசில் ரசிகர்களுக்கும், அர்ஜெண்டினா ரசிகர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதனால் பிரேசில் போலீசார் அர்ஜெண்டினா ரசிகர்களைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். இதில் ரசிகர்கள் பலர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த கேப்டன் மெஸ்ஸி தனது அணியினரான ரோட்ரிக்ஸ், எமிலியானோ மார்டினஸ், ஓட்டோமெண்டி, டீ பால் உள்ளிட்ட இன்னும் சில வீரர்களை அழைத்துக் கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றார்.
அப்போது கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் அர்ஜென்டினா ரசிகர்களை தாக்கிய போலீசாரின் கைகளில் இருந்த லத்தியை பிடுங்கி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நடுவரிடம் நாங்கள் விளையாட தயாராக இல்லை என வெளியேறுகிறோம் என மெஸ்ஸி கூறியதாக கூறப்படுகிறது.