63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றுவருகின்றன. இதில், மகளிர் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3ஆம் பிரிவுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாபைச் சேர்ந்த அஞ்சும் முட்கில் 1,172 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
இதையடுத்து, பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் 449.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம், இந்தத் தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு வீராங்கனை காயத்ரி நித்யானந்தம் 447.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஹரியானாவின் நிஷ்சால் 434.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.