சீனாவில் 144 நாடுகள் பங்கேற்ற 7-வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகளப் போட்டிகள் கடந்த அக்.17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந்தன் பங்கேற்று 100மீ, 200மீ, 400மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்காக மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
பதக்கம் வென்ற ஆனந்தன், தனது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வந்தபோது அவருக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அங்குள்ள காந்தி சிலைக்கு ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக வாகனத்தில் அழைத்து வந்து, அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான க.அன்பழகன், அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன், முன்னாள் ராணுவத்தினர், நண்பர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.