2019ஆம் ஆண்டிற்கான புரோ கபடி தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்றுவருகின்றன. இத்தொடரின் 90ஆவது லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தமிழ்தலைவாஸ் அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் முதலில் சிறப்பான தொடக்கத்தைத் தந்தன. அதன்பின் ஹரியானா அணி வீரர்கள் தங்களது அஃபென்ஸ் (ரெய்டு பாடிப்போவது) பிரிவில் தமிழ்தலைவாஸ் அணி திக்குமுக்காடச்செய்தது.
ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 16-14 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரியானா அணி தமிழ்தலைவாஸ் அணியை மீண்டும் தோல்வியை சந்திக்கவைத்தது.
ஆட்டநேர முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 43 புள்ளிகளையும் தமிழ்தலைவாஸ் அணி 35 புள்ளிகளையும் பெற்றன. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 54 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. தமிழ்தலைவாஸ் அணி 27 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.