கோவிட்-19 பெருந்தொற்றினால் இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் ஐபிஎல், டிஎன்பிஎல் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவில், விளையாட்டு வீரர்கள் தங்களது தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்ளுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து விளையாட்டுத்துறையை சேர்ந்த வீரர்கள் தங்களது பயிற்சிக்கு திரும்பவுள்ளனர்.
இந்நிலையில் தடகள வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளும் போது சில கட்டுப்பாடுகளை விதித்து இந்திய தடகள கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘தடகள விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சியின் போது மற்ற வீரர்களுடன் கைக்குலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பயிற்சி மைதானத்தில் தும்மும் போதும், இருமும் போதும் கட்டாயம் கைக்குட்டையை வைத்து முகத்தை மூட வேண்டும். அதேசமயம் மைதானத்தில் எந்த வீரரும் எச்சில் துப்பக்கூடாது.
மேலும், வீரர்கள் எப்பொழுதும் தகுந்த இடைவெளியை பின்பற்றுவது அவசியம். அதேபோல் அவர்கள் முடித்திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், மால்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் பார்சல் உணவுகள் மற்றும் ஆர்டர் செய்யும் உணவுகளை உண்ணவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பயிற்சி முடிந்து தங்களது அறைக்கு செல்லும் வீரர்கள் பிறரது உடமைகளை தொடவோ, தங்களது உடமைகளை பிறர் தொடுவதற்கோ அனுமதிக்கக்கூடாது. வீரர்கள் தங்களது அறைக்கு சென்றதும் குளிக்க வேண்டும், அதேபோல் பயிற்சியின் போது அணிந்த உடையை, அறைக்கு சென்றதும் களைந்து, வேறு உடையை அணியவேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:' அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி போட்டிகளை நடத்தலாம்' - கிரண் ரிஜிஜு