கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. நேற்று உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் மூலம் ரஷ்யா நாட்டிற்கு நான்கு ஆண்டுகள் அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடத் தடை விதித்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
மேலும் அந்த அமைப்பு அனைத்து நாடுகளின் வீரர்களுடைய ஊக்க மருந்து சோதனை விவரங்களை தங்களிடம் ஒப்படைக்கும் படியும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக சரிபார்க்கப்படாத பல வீரர்களுடைய விவரங்களும் அனுப்பிவிடக் கூடும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளனர்.
இதில் இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பாடி பில்டிங் பிரிவைச் சேர்ந்த வீரர்களே ஏராளம் என இந்திய ஊக்க மருந்து தடுப்புப் பிரிவு தெரிவித்திருந்தது, மேலும் பீதியைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு எட்டு மாதங்களே உள்ள நிலையில் மீதமுள்ள வீரர்களின் ஊக்க மருந்து பரிசோதனைகள் நிறைவடையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு விடைதேடும் முயற்சியில் தற்போது தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பானது ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் விளம்பரத் தூதராக பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியை நியமித்துள்ளது அந்த அமைப்பு. மேலும் இவரது நியமனம் குறித்து அந்த அமைப்பு தெரிவிக்கையில்,
'சுனில் ஷெட்டி இந்திய அளவில் பிரபலமடைந்த சினிமா நடிகர். மேலும் இவரை நியமித்ததன் மூலம் பல்வேறு விளையாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கும் ஊக்க மருந்து உட்கொள்வது தண்டிக்கப்படக்கூடிய செயல் என்ற விழிப்புணர்வு ஏற்படும். அதனால் தான் இந்த அமைப்பின் விளம்பரத் தூதராக இவரை நியமித்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஊக்க மருந்து புகார் - ரஷ்யாவுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்துப்போட்டிகளிலும் விளையாடத் தடை!