இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ். இவர் 2003ஆம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் அத்தொடரில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் நீளம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக, தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில் அஞ்சு பாபி ஜார்ஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பலரால் இதை நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், நான் மிக அதிர்ஷ்டசாலி. ஒரே ஒரு சிறுநீரகத்தைக் கொண்டு, வலி நிவாரணிக்குக்கூட ஒவ்வாமை, மந்தமான கால்கள்….. இப்படி பல தடைகள் என் முன் இருந்தன. ஆனாலும் என்னால் உலக தர வரிசையில் உச்சியை எட்ட முடிந்தது. இதை என் பயிற்சியாளரின் மாயமென்று சொல்வதா அல்லது திறமை என்று சொல்வதா” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரன் ரிஜிஜூ, “அஞ்சு தனது கடின உழைப்பு, மன திடம், மன உறுதியின் மூலம் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் நீங்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க:‘மீண்டுவருவது முக்கியம்’ - விஜய் சங்கருடனான நேர்காணல்!