ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் வரும் பிப்ரவரி 18 முதல் 23 வரை டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க நான்கு பாகிஸ்தான் வீரர்கள், ஒரு பயிற்சியாளர், ஒரு நடுவர் என ஆறு பேருக்கு இந்தியா விசா வழங்கிய நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை சந்தித்துவரும் சீனாவை சேர்ந்த வீரர்களுக்கு இந்தியா விசா வழங்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், மற்ற வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் தொடரில் பங்கேற்கவிருந்த 40 சீன வீரர்களின் விசாவை இந்திய அரசு ரத்துசெய்துள்ளதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலாளர் வினோத் டோமர் கூறுகையில்,
"பாகிஸ்தான் வீரர்களுக்கு நாங்கள் விசா வழங்காமல் இருந்திருந்தால் வேறுவிதமான பிரச்னைகள் எழுந்திருக்கும். ஆனால், சீன வீரர்களுக்கு விசா வழங்கும் விவகாரத்தில், கலந்துகொள்ளும் வீரர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் இந்தத் தொடர் மட்டுமின்றி மற்ற நாடுகளில் நடைபெறும் இதர விளையாட்டு தொடர்களிலும் கலந்துகொள்ள சீன வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது" என்றார். கொரோனா வைரஸால் சீனாவில் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கொரோனோ வைரஸ் எதிரொலி - ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா ஒன் கார் ரேஸ்