கோவாவில் கடந்த ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிலம்பாட்டப் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் 26 பேர் கலந்துகொண்டனர். இதில் 24 பேர் தங்கப் பதக்கங்களையும், இருவர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அசத்தினர். இதில் வெற்றி பெற்றவர்கள் ஆகஸ்ட் மாதம் துபாயில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிலம்பாட்டப் போட்டியில் 24 தமிழ்நாடு வீரர்களுக்கு தங்கம்! - silambattam
கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
இதுகுறித்து, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தேசிய பயிற்சியாளர்கள் வேல்முருகன், விஜயகுமார் கூறுகையில், "சிலம்பம் என்பது அடிதடி போட்டி என்பதை மாற்றும் வகையில் பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிலம்பப் போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பயிற்சி அளித்த சிலம்பக்கலை என்பது நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஆகும். அந்த கலையை வளர்க்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது கலையை வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் கற்றுக்கொண்டுள்ளனர்" என்று கூறினர்.
மேலும், "தமிழ்நாடு பள்ளிகளில் சிலம்பாட்டத்தை கட்டாய பாடமாகக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவந்தால் சிலம்பாட்ட போட்டிக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும். இதன் மூலம் தமிழ்நாடு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கான முயற்சியில் தமிழக சிலம்பாட்ட சங்கம் ஈடுபட்டு வருகிறது" என்றனர்.