ஜப்பான் என்றாலே சுறுசுறுப்பும் அவர்களது அதீத தொழில்நுட்ப வளர்ச்சிதான் நம் நினைவுக்கு வரும். அந்தவகையில், அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற இன்னும் எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன.
இந்தத் தொடருக்காக சிறப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இப்போட்டியைப் பார்க்க உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஜப்பானுக்கு வரும் ரசிகர்களை வரவேற்கும்விதமாக புதுமையான முயற்சியில் ஹெனேடா விமான நிலையத்தின் ஊழியர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை உலகிலுள்ள பல நகரங்களுடன் இணைக்கும் ஹெனெடா விமான நிலையம், அந்நாட்டின் பிரதான நுழைவாயிலாக உள்ளது. இது தலைநகருக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் என்பதால் பல உள்ளூர், வெளிநாட்டுப் பயணிகள் இந்த விமான நிலையத்தையே அதிகம் பயன்படுத்த முன்னுரிமை அளிக்கின்றனர். அதேசமயம் ஜப்பான் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதனால், டோக்கியோ ஒலிம்பிற்காக ஹெனேடா விமான நிலையத்திற்கு வருகைதரும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில், அங்கு ரோபோக்கள் மூலம் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. மேலும். இந்த ரோபோ பயணிகளுக்கு ஒலிம்பிக் தொடர் குறித்தும் வழிகாட்டவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி டோக்கியோவில் கோலகலமாகத் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக தயார் செய்யப்பட்ட மைதானம் திறப்பு!