தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பாக ஈரோடு மாவட்டத்தில் செஸ் நடுவருக்கான தேர்வு மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்காக கண்மணி, இந்திராணி, திருஞான சம்பந்தன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் முன்னதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேர்வுக் கட்டணமாக ரூ.1000 கட்டியுள்ளனர்.
ஆனால் இவர்கள் அனைவரும் தேர்வு நடக்கும் நாளில், தேர்வில் பங்கேற்க அனுமதிப்படவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகையில், ''கடந்த 15 நாள்களாக செஸ் நடுவருக்கான தேர்வுக்கு தயாராகிவந்தேன். ஆனால் மாவட்ட செஸ் செயலாளர் எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார் என எதிர்பார்க்கவில்லை'' என்றார்.
செஸ் நடுவர் தேர்வினை எழுதுவதற்கு மாவட்ட செஸ் சங்க செயலாளரின் பரிந்துரையுடன்தான் மாநில சங்கத்திற்கு விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். அப்போதுதான் அவர் செஸ் நடுவருக்கான தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவார்.
இந்த பிரச்னை குறித்து தேர்வு ஒருங்கிணைப்பாளர் நாச்சிமுத்துவிடம் பேசுகையில், ''இவர்கள அனைவரும் நடுவர் தேர்வினை எழுதுவதற்கான விண்ணப்பத்தை என்னிடம் கொடுத்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிந்துரை செய்வதற்காக மாவட்ட செயலாளரை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் நேரடியாக தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பினேன். ஆனால் மாநில சங்கம் அவர்களின் விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கவில்லை. அதனால் தேர்வில் கலந்துகொள்ள அவர்கள் அனுமதிக்கப்படவில்லை'' என்றார்.
இதனைப்பற்றி மாவட்ட செஸ் செயலாளர் ரமேஷிடன் பேசுகையில், ''இந்த ஐந்து பேரும் சங்கத்தால் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளுக்காக உதவி கேட்டபோது எதுவும் செய்யவில்லை. அவர்கள் அனைவரும் சொந்தமாக போட்டிகளை நடத்தி வந்தனர்'' என குற்றஞ்சாட்டினார். இந்த சம்பவம் செஸ் சங்க நிர்வாகிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"கிரிக்கெட்டைப்போல் செஸ் ஐ.பி.எல் போட்டி" - உலக சதுரங்க கூட்டமைப்பு துணைத்தலைவர்!