அடோல்ப் ஹிட்லர் குறித்து பேச்சு ஆரம்பித்தாலே, யூத இனப்படுகொலைதான் அனைவரின் நினைவுக்கும் வரும். அப்படிப்பட்ட ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட காலத்தில் நடைபெற்ற 1936 ஒலிம்பிக் தொடரைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருந்திருக்க வாய்ப்பில்லை.
1931ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) கூட்டத்தில் 1936 கோடைகால ஒலிம்பிக் தொடர் நடத்தும் உரிமை ஜெர்மனிக்கு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்த இரண்டு ஆண்டில், அதாவது 1933இல் தனது சர்வாதிகாரத்தை ஜெர்மனியில் முழுமையாக நிலைநாட்டிவிட்டார் ஹிட்லர்.
ஆரிய ஆதிக்கத்தின் மேடை
ஹிட்லரின் நாஜி பரப்புரையில் ஆரிய மரபணு மட்டுமே உயர்ந்தது என்ற கருத்துண்டு. ஐந்த கண்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற 1936 ஒலிம்பிக்கை, தனது ஆரிய ஆதிக்கத்தை காட்சிப்படுத்தக்கூடிய மேடையாகத்தான் ஹிட்லர் பார்த்தார்.
ஆரிய இனத்தவர் மட்டுமே இந்தத் தொடரில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதுதான் ஹிட்லரின் கனவாக இருந்தது.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் யூத விளையாட்டு வீரர்களும் ஜெர்மனியின் மனநிலையைப் புரிந்துகொண்டு, பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் முரண்பட்டனர். அங்குள்ள மனித உரிமை இயக்கங்களும் பெர்லின் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கும்படி அவர்களை வலியுறுத்தின.
மேலும், பெர்லினின் தெருக்கள்தோறும் நாஜிகளின் கொடிகளும், துண்டறிக்கைகளும் அதிகமாகக் காணப்பட்டன. இது, யூதர்களைப் பெரும் கவலைக்குள்படுத்தியது.
ஒரே ஒரு யூதர்
இவ்வளவு, அச்சுறுத்தலுக்கப் பிறகும் அந்த ஒலிம்பிக் தொடரில் ஜெர்மனி சார்பாக ஒரே ஒரு யூதர் மட்டுமே பங்கேற்றார். வாள்வீச்சு வீராங்கனையான ஹெலன் மேயரின் தாய் யூதர் அல்லாத காரணத்தினாலும், அந்தக் காலக்கட்டத்தின் சிறந்த வாள்வீச்சாளர் என்பதாலும்தான் அவர் ஒலிம்பிக்கில் அனுமதிக்கப்பட்டார்.