இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை நாட்டில் 5,194 இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 149 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் அடித்தட்டு மக்கள், தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியை பிரதமரின் நிவாரண நிதிக்கும், மாநில அரசின் நிவாரண நிதிக்கும் செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டும் வகையில் தான் வென்ற 102 கோப்பைகளை விற்பனை செய்து அதிலிருந்து கிடைத்த நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பிரதமர் நிதியுதவிக்கு வழங்கியதாக 15 வயது இந்திய கோல்ப் வீரர் அர்ஜுன் பாட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாம் அனைவருக்கும் தெரிந்தபடி நாட்டில் கரோனா வைரஸால் தற்போது இக்கட்டான நிலை நிலவிவருகிறது. இதனை சரி செய்யும் வகையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்மால் முடிந்த நிதியுதவி வழங்க வேண்டும்.
அதனால் நான் கடந்த எட்டு ஆண்டுகளில் வென்ற 102 கோப்பைகளை விற்பனை செய்து அதில் கிடைத்த 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பிரதமரின் நிவராண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளேன். இந்த ஊரடங்கு உத்தரவால் நமக்கு கிடைத்துள்ள இந்த நேரத்தை பயன்படுத்திகொண்டு நாம் அனைவரும் தனிமையுடன் இருப்பதை கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.
கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த எட்டு ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட தொடர்களில் பங்கேற்று 102 கோப்பைகளை வென்றுள்ளார். குறிப்பாக மூன்றுமுறை உலக கோல்ப் சாம்பியன்ஷிப், ஒரு தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: ஒரே வாரத்தில் ரூ. 1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா
!