1983இல் இந்திய அணி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமையை இந்திய வீரர்கள் கிரிக்கெட்டில் தேடித்தந்தனர் என நாம் அவர்களது வெற்றியை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினோம், அது தவறில்லை கிரிக்கெட்டும் இந்தியாவின் தெருக்களில் ஊடுருவி இருக்கிறது.
சுதந்திரம் பெற்று 35 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நம் நாட்டின் பெருமையை இந்திய அணி கிரிக்கெட்டில் நிலை நாட்டியது. ஆனால், சுதந்திரம் கிடைப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு மாயாஜாலக்காரர் இந்தியாவின் பெருமையை ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் பறைசாற்றினார்.
சரியாக 1930 காலகட்டங்களில் ஆங்கிலேயர்களும், ஹிட்லரும் உலகத்தை ஆட்டிப்படைத்தபோது இரண்டு ஜாம்பவான் வீரர்கள் அவர்களை மிரள செய்தனர். ஒருவர் கிரிக்கெட்டின் டான் பிராட்மேன், மற்றொருவர் ஹாக்கியின் பிதாமகன் தயான் சந்த். ஹாக்கி என்றால் தயான் சந்த், தயான் சந்த் என்றால் ஹாக்கி. இவர் இந்திய ஹாக்கியின் முகம் மட்டுமல்ல உலக ஹாக்கியின் முகமாகவும் ஜொலித்தவர்.
தயான் சந்த் அல்ல தயான் சிங்
தயான் சந்த், தயான் சந்த் என்று இவரை கூறுகிறோம், இணையதளத்தில் அவரை குறித்து தேடியும் வருகிறோம். ஆனால், உண்மையில் இவரது பெயர் தயான் சந்த் அல்ல தயான் சிங். சிறு வயதில் தயான் சிங்கிற்கு ஹாக்கியைவிடவும் மல்யுத்தப் போட்டியில்தான் அதிக ஆர்வம். அதேசமயம், தனது நண்பர்களுடன் சேர்ந்து மரக்குச்சிகளை ஹாக்கி பேட்டுகளாகவும், கிழிந்தத் துணிகளை பந்தாகவும் வைத்துதான் இவர்கள் ஹாக்கி விளையாட்டை பழகினர்.
இவரது தந்தை ஹாக்கி வீரரும் ராணுவ வீரரும்கூட. தயான் சிங் 14 வயதை அடைந்தபோது அவரது தந்தை இவரை ஹாக்கி போட்டிக்கு அழைத்து சென்றார். அந்தப் போட்டியில் ஒரு அணி 2 கோல் பின்தங்கி இருந்தது. அந்த அணிக்காக, ”தான் விளையாட வேண்டும்” என தயான் சிங் அவரது தந்தையிடம் கேட்க, அதற்கு ராணுவ வீரர் ஒருவர் ஓ.கே சொன்னார்.
தயான் சிங் அல்ல தயான் சந்த்
இதைத்தொடர்ந்து போட்டியில் களமிறங்கிய தயான் சிங் நான்கு கோல் அடித்து தோல்வி அடைய வேண்டிய அணியை வெற்றிபெற வைத்தார். இவரது ஆட்டத்தைப் பார்த்து பிரமித்த அந்த ராணுவ வீரர் இவருக்கு ராணுவத்தில் சேர ஆஃபர் தர, தயான் சிங்கும் 1922இல் தனது 16ஆவது வயதில் இந்திய பிரிட்டிஷின் ராணுவப் படையில் சேர்ந்தார்.
அங்கு மேஜர் சுபேதார் இவருக்கு ஹாக்கியில் சில நுணுக்கங்களைக் கற்றுத்தர, தொடர்ந்து தயான் சந்த் ஹாக்கி மீது ஆர்வம் காட்டினார். பங்கஜ் குப்தாதான் இவரது முதல் பயிற்சியாளர். இவரது திறமையைப் பார்த்து அவர் நிச்சயம் ஒருநாள் நிலவைப் போல் ஹாக்கியில் தயான் ஜொலிப்பார் என கணித்துள்ளார். ஹிந்தியில் சந்த் என்றால் நிலவு என்று அர்த்தம். எனவே இவரது பெயர் தயான் சிங்கில் இருந்து தயான் சந்த் என மாறியது.
தயான் சந்த் என்னும் மாயாஜாலக்காரர்
அதன் பின்னர் ராணுவ அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற, இவரது மேஜிக்கும் நடைபெற்றுக்கொண்டே இருந்தது. குறிப்பாக, ஜீலமில் (அப்போதைய பாகிஸ்தானில்) பஞ்சாப் தரைப்படை ராணுவ வீரர்களுக்கிடையே ஹாக்கித் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், இவரது அணி 2 கோல் பின்தங்கி இருக்க ஆட்டம் முடிய நான்கு நிமிடங்கள் மட்டுமே இருந்தன. இந்த நிலையில் தயான் சந்த் மாயஜாலம் செய்வதைப்போல் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதனால், இவருக்கு Wizard of Hockey அதாவது ’ஹாக்கியின் மாயாஜாலக்காரர்’ என்ற பெயர் கிடைத்தது.
ஹாக்கியில் சதம் விளாசிய தயான் சந்த்
பின்னர், ஒவ்வொரு தொடரிலும் இவர் சிறப்பாக விளையாட 1926இல் இந்திய பிரிட்டிஷ் அணியில் இடம் கிடைத்தது. நியூசிலாந்துக்கு பயணப்பட்ட இந்திய அணி 20 ஹாக்கி போட்டிகளில் விளையாடியது. இந்தத் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 18 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியை பெற்றது. இந்திய அணி மொத்தம் இந்தத் தொடரில் 192 கோல்களை பதிவு செய்ததில், தயான் சந்த் மட்டும் 100 கோல்கள் அடித்து அசத்தினார். கிரிக்கெட்டில் சதம் விளாசுவதே கஷ்டம் ஆனால் தயானோ ஹாக்கியில் சதம் அடித்து தான் ஒரு மாயாஜலக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
பந்தை லாவகாக கடத்தி செல்லும் தயான் சந்த் 1928 முதல் தங்கம்
1928 ஒலிம்பிக் தொடர் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பாக கலந்துகொண்ட தயான் சந்த், தனது வித்தையை அங்கேயும் அரங்கேற்றினார். நெதர்லாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் இரண்டு கோல்கள் அடிக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. தட்டிச் சென்றது தங்கம் மட்டுமல்ல இந்தியாவின் பெருமையையும்தான்.
அந்தத் தொடரில், தயான் சந்த் 14 கோல்கள் அடித்தார். இவர் ஹாக்கி வீரர் அல்ல வித்தைக்காரர் என நெதர்லாந்து பத்திரிகைகள் எழுதின.
1932 ட்வின்ஸ் மேஜிக்கில் இரண்டாவது தங்கம்
1932 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் தயான் சந்த்துக்கு பார்ட்னராக அவரது சகோதரர் ரூப் சிங் விளையாடினார். இருவரும் சேர்ந்து கோல் மழையாக பொழிய இந்திய அணி 23-1 என்ற கணக்கில் பாரபட்சம் பார்க்காமல் அமெரிக்காவை அடித்து துவைத்து, இரண்டாவது தங்கத்தையும் வென்றது. இந்தத் தொடரில் இந்தியா 35 கோல்கள் அடித்தில் தயான் சந்த் 10, ரூப் சிங் 13 கோல்களை அடித்தனர். நெதர்லாந்தைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்தியாவின் புகழ் ஒலித்தது.
1936 தயான் சந்துக்கு விளம்பரம் செய்த ஜெர்மனி பத்திரிகை
1936 ஒலிம்பிக் தொடர் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது. சர்வதகாரியான ஹிட்லரின் காலம் அது. இந்தத் தொடர் தயானுக்கு மறக்கமுடியாதது. ஏனெனில் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒரு காரணம் இந்திய அணியின் கேப்டனாக அவர் பங்கேற்ற முதல் பெரிய தொடர் அதுதான்.
தயான் சந்த் என்னும் மாயாஜாலக்காரர் லீக் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை பந்தாடியது. இவரது ஆட்டம் ஜெர்மன் பத்திரிகையாளர்களின் கண்களில் பட்டது. இதனால், ஜெர்மன் பத்திரிகை ஒன்று, ஒலிம்பிக் தொடர் நடைபெறும் பெர்லினில் மேஜிக் ஷோ நடைபெறுகிறது என்ற பேனர் வைக்க, மற்ற போட்டிகளை பார்த்துவந்த ரசிகர்கள் இவரது ஹாக்கி விளையாட்டைப் பார்க்க வருகைத் தந்தனர். அதுமட்டுமின்றி, தயான் சந்தின் மேஜிக் ஷோவை காண ஹாக்கி மைதானத்துக்கு வாருங்கள் என போஸ்டரும் பெர்லின் நகர் முழுவதும் ஒட்டப்பட்டது.
ஹிட்லர் முன் ஜெர்மனியை வீழ்த்திய தயான் சந்த்
அமெரிக்கா, ஜப்பான், ஹங்கேரி, பிரான்ஸை பந்தாடி இந்திய அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்தத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் ஜெர்மனியுடன் தோல்வி அடைந்திருந்தது.
ஒருமுறை இந்திய அணியை தோற்கடித்தோம், இதனால் மீண்டும் ஒருமுறை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வெல்வோம் என்ற நம்பிக்கையில் ஜெர்மனி வீரர்கள் ஹிட்லருக்கு முன் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதுவரை ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு இப்போட்டி சவால் நிறைந்ததாகவே இருந்தது.
பெர்லின் ஒலிம்பிக்கில் கோல் அடித்த தயான் சந்த் அதேசயம், ஆட்டத்தின்போது ஜெர்மனி கோல்கீப்பர் முரட்டுத்தனமாக டிஃபெண்ட் செய்ததால் தயான் சந்தின் ஒரு பல் உடைந்தது. பின்னர், ”ஜெர்மனி வீரர்கள் ஒரு கோல்கூட அடிக்க முடியாத அளவில் அவர்களுக்கு நல்லப் பாடத்தை புகட்ட வேண்டும்” என முதல் பாதி இடைவேளையில் தயான் சந்த் இந்திய வீரர்களிடம் கூறினார்.
இரண்டாம் பாதியில் களமிறங்கியபோது தயான் சந்த் மற்றும் பெரும்பாலான இந்திய வீரர்கள் ஷூ இல்லாமல் விளையாட மைதானத்தில் நடந்ததெல்லாம் மேஜிக்தான். இந்தியாவின் ஆட்டத்துக்கு ஜெர்மனியிடம் பதில் இல்லை. ஆனால் எப்படியோ அந்த அணி ஒரு கோல் அடித்துவிட்டது. ஆனால், இந்திய அணியோ 8 கோல்கள் அடித்து ஜெர்மனியை மிரட்டியது. ஹிட்லரையும்தான். அதில் தயான் சந்த் ஹாட்ரிக் கோல் அடித்தார். அவர் மட்டுமல்ல இந்தியாவும் தங்கப்பதக்கத்தில் ஹாட்ரிக் அடித்தது.
1936 பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணி உலகமே பார்த்து மிரண்ட ஹிட்லரோ தயான் சந்தின் ஆட்டத்தைக் கண்டு மிரண்டு, ஜெர்மனிக்காக ஹாக்கி விளையாடு உனக்கு ஜெர்மனி ராணுவ படையில் உயரிய பதவியை அளிக்கிறேன் என ஆஃபர் தந்தார். ஆனால், ஹிட்லரின் ஆஃபருக்கு நோ சொல்லி தயான் சந்த் கெத்து காண்பித்தார். பலரும் ஹிட்லருக்கு முன் நின்ற பேச பயந்த காலத்தில் இவர் துணிச்சலாக நோ சொன்னது இன்றுவரை பெரிய வரலாறு.
தயான் சந்தை கண்டு வியந்த டான் பிராட்மேன்
1935ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஹாக்கி தொடரில் விளையாடியது. அப்போது அடிலெயிட் மைதானத்தில் தயான் சந்தின் ஆட்டத்தைக் கண்ட டான் பிராட்மேன், கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்பது போல் இவர் கோல் அடிக்கிறார் என பாராட்டினார்.
ஓய்வு பெற்ற மாயாஜாலக்காரர்
தனது 42ஆவது வயதுவரை ஹாக்கி விளையாடிய தயான் சந்த் 1948ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக 22 ஆண்டுகள் ஹாக்கி விளையாடிய இவர் 1000க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து மிரட்டினார். பின்னர், ஹாக்கியின் அடையாளமாக மாறிய தயான் சந்துக்கு மத்திய அரசு 1956இல் பத்ம பூஷன் விருது வழங்கி கெளரவித்தது. இவரது பிறந்தநாளான இன்றுதான் தேசிய விளையாட்டு நாளாக நாம் கொண்டாடிவருகிறோம்.
ஒருமுறை இவரது ஆட்டத்தை பார்த்த நெதர்லாந்து வீரர்கள், இவரது பேட்டில் மேக்னெட் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இவரது பேட்டை உடைத்து பரிசோதனை செய்தனர். ஏனெனில், பந்து இவரது ஹாக்கி ஸ்டிக்கிற்கு வந்தால் அதை பறிக்கமுடியாது.
அதேபோல், ஒருமுறை தயான் சந்தால் கோல் அடிக்க முடியாமல் போனது. அப்போது, கோல் போஸ்டின் சைஸ் சரியில்லை என்றார். இதைத்தொடர்ந்து, நடுவர்களும் செக் செய்து பார்த்ததில் கோல் போஸ்டின் சைஸ் குறைவாக இருந்தது உறுதியானது. தான் சார்ந்த விளையாட்டின் மீது அதீத காதல் இருந்தால் மட்டுமே இந்த அளவிற்கு நுணுக்கமாக ஒருவரால் கவனிக்க முடியும் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும், அந்த விளையாட்டின் உலக நாயகன் தயான் சந்த்.... மிஸ் யூ தயான்