கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் வைரஸின் தாக்கம் குறையத் தொடங்கியதை அடுத்து, விளையாட்டு போட்டிகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து மகளிர் ஹாக்கி அணியைச் சேர்ந்த வீராங்கனைகள், பெங்களூருவிலுள்ள இந்திய விளையாட்டு அமைச்சக பயிற்சி மையத்தில், தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான பயிற்சி அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது.
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னே கூறுகையில், “இந்த பயிற்சியில் எங்களது குறிக்கோள்களில் ஒன்று எங்கள் உடற்தகுதியை மேம்படுத்துவது. அதனை நாங்கள் தற்போது சிறப்பாக செய்து முடித்துள்ளோம். கடந்த சில வாரங்களாக நாங்கள் ஜூனியர் ஆடவர் அணியுடன் எங்களது பயிற்சிகளை தொடர்ந்தோம். அது எங்களுக்கு பெரும் பயனை அளித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போது நாங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் எங்களது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளோம். அதற்கு இப்பயிற்சி எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நல்ல போட்டிகளில் விளையாடுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இது எங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாக அமையும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘என்னுடைய உத்வேகம் மேரி கோம்’ - பாலா தேவி