தமிழ்நாடு

tamil nadu

டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியா ஹாக்கி அணி போராடி தோல்வி

By

Published : Aug 3, 2021, 9:21 AM IST

Updated : Aug 3, 2021, 10:00 AM IST

ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதின. 41 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியதை அடுத்து இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சமநிலையில் முதல்பாதி

ஆட்டம் ஆரம்பித்த இரண்டாம் நிமிடத்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பெல்ஜியம் முதல் கோலை அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பெல்ஜியம் அணி வீரர் லோயிக் பேனி முதல் கோலை தேடித்தந்தார்.

தொடக்கத்திலேயே பின்னடைவைச் சந்தித்தாலும் இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது.

ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி ஆட்டத்தை 1-1 சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

அடுத்த நிமிடத்திலேயே இந்திய அணி அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் இந்திய அணிக்குக் கிடைத்த வாய்ப்பை மன்தீப் சிங் கோலாக மாற்றினார். இதையடுத்து 2-1 என்று கோல் கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றது.

இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவந்த நிலையில், ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு பெலான்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. அதை அந்நாட்டின் அலெக்ஸாண்டர் ஹென்ட்ரிக்ஸ் கோலாக மாற்றினார்.

பெல்ஜியம் வெற்றி

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் ஆட்டம் 2-2 என்று சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறிமாறி அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் நீண்ட நேரத்திற்கு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஆட்டத்தின் 49ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை அலெக்ஸாண்டர் மீண்டும் கோலாக மாற்ற 3-2 என பெல்ஜியம் முன்னிலை பெற்றது.

53ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்ஸாண்டர் தனது பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை மீண்டும் கோலாக மாற்ற 4-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதி நிமிடமான 60ஆவது நிமிடத்தில் டோஹ்மன் பெல்ஜியம் அணிக்கு ஐந்தாவது கோலை அடித்ததார்.

இறுதியில் பெல்ஜியம் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணியுடன் பெல்ஜியம் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. தோற்கும் அணியுடன் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் மோதவுள்ளது.

இதையும் படிங்க:எனது பயணம் இத்துடன் நிற்காது- பி.வி. சிந்து

Last Updated : Aug 3, 2021, 10:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details