28ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் ஆறு நாடுகள் பங்கேற்று விளையாடிவரும் நிலையில், இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள நான்காவது ஹாக்கி போட்டியில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது. இளம் வீரர்களுடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ள இந்திய அணி கடந்த போட்டியில் வலிமையான மலேசியாவை எதிர்கொண்டு 2-4 என வெற்றிபெற்றது.
அதேபோல், கனடா அணி முதல் போட்டியில் தென்கொரியாவிடம் 3-6 என தோல்வியடைந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி 6 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் கனடா அணி தோவியடைந்தால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில், பிரேந்திர லக்ரா, வருண் குமார், கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் அபாரமாக ஆடிவருவதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.