நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்து, கிரேட் பிரிட்டன் ஆகிய அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஹாக்கி தொடரில் விளையாடிவருகிறது. இதில், நியூசிலாந்து டெவலப்மன்ட் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற இந்திய அணி, அதன் பின் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 1-2 என்ற கணக்கிலும், மூன்றாவது லீக் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கிலும் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
கிரேட் பிரிட்டனை வீழ்த்திய இந்திய மகளிர் அணி!
ஆக்லாந்து: கிரேட் பிரிட்டனுக்கு எதிரான முத்தரப்பு ஹாக்கி தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான நான்காவது லீக் போட்டி இன்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் அணி அட்டாக்கிங் ஆட்டத்திலேயே ஈடுபட்டது. அதன் பலனாக இந்திய அணிக்கு முதல் பாதியில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தாலும், அதை கோலாக்க முடியாமல் போனது.
இருப்பினும் மனம் தளராத இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து அட்டாக்கிங்கிலும், டிஃபெண்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த நிலையில், 47ஆவது நிமிடத்தில் கேப்டன் ராணி ராம்பால் சிறப்பாக கோல் அடித்து மிரட்டினார். இதனால், இந்திய மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள இந்தத் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதவுள்ளது.