2020ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும்.
இந்த ஆண்டு நடைபெறும் தொடரின் முதல் போட்டி இந்தியாவின் புபனேஷ்வரில் நடைபெற்றது. அதில் தரவரிசையில் மூன்றாவது இடத்திலிருக்கும் நெதர்லாந்து அணி, ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியுடன் மோதியது. இந்த இரு அணிகள் கடைசியாக 2018இல் நடந்த உலகக்கோப்பைத் தொடரில் மோதியபோது, இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தோடு களமிறங்கியது.
இதனிடையே ஒலிம்பிக் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணியில் மூத்த வீரர்கள் பலரும் நீக்கப்பட்டு, இளம் வீரர்களே அணியில் இடம்பிடித்துள்ளனர். வலிமையான இரு அணிகள் மோதியதால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.
முதல் குவார்ட்டர் ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்திய அணியின் நடுகள வீரர் குர்ஜந்த் சிங் கோல் அடித்து தனது வலிமையை நிரூபிக்க, அதனைத் தொடர்ந்து 12ஆவது நிமிடத்தில் இந்திய அணி வீடியோ ரெஃபெரல் (3ஆவது அம்பயர்) கேட்க, பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் டிஃபெண்டருமான ரூபேந்தர் பால் சிங், இரண்டாவது கோலை அடித்தார். இந்தக் கோலுக்கு பதிலடியாக நெதர்லாந்து அணியின் ஜிப் ஜான்சன் கோல் அடித்ததால் ஆட்டம் பரபரப்பானது. இதன்பின் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதனை ஹர்மன் ப்ரீத் சிங் வீணடித்தார். இதனால் முதல் குவார்ட்டரின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலைப் பெற்றது.