புவனேஷ்வர்: இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசுதான் ஸ்பான்சராக உள்ளது. சீனியர் ஆடவர், சீனியர் மகளிர், ஜூனியர் ஆடவர், மகளிர் என அனைத்துத் தரப்பு ஹாக்கி அணியினருக்கு 2017ஆம் ஆண்டு முதல் நிதியுதவி அளித்துள்ளது.
இந்நிலையில், ஹாக்கி இந்தியா தொடர்பான விழா இன்று ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இன்று (செப். 23) நடைபெற்றது. அதில், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்துகொண்டார்.
உடனடியாக ஒப்புக்கொண்டோம்
அந்த விழாவில் பேசிய நவீன் பட்நாயக், "வரும் இரண்டு மாதங்களுக்குள் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையை ஒடிசாவில் நடத்துவது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு எங்களை அணுகியது. இது நாட்டின் கௌரவம் தொடர்புடையது என்பதால், அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டோம்.
அதுவும், இதுபோன்ற ஒரு பெரிய தொடரை இந்தக் கரோனா பெருந்தொற்று காலத்தில் நடத்துவது என்பது அசாத்தியமானது. ஆனால், ஒடிசா அரசு இந்தத் தொடரை நடத்துவதற்குத் தயாராக உள்ளது.
ஹாக்கி இந்தியா விழாவில் நவீன் பட்நாயக் பேச்சு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH) ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர், டிசம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற இருக்கும் ஹாக்கி உலகக்கோப்பை, இந்திய நாட்டின் முக்கிய நிகழ்வாக இருக்கும். அது இந்தியாவின் ஹாக்கியை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும்" என்றார்.
ஜூனியர் உலக்கோப்பை தொடரின் இலச்சினை - கோப்பையை அறிமுகப்படுத்திவைத்தார்.
இதையும் படிங்க: IPL 2021: கொல்கத்தா அணிக்கு 156 ரன்கள் இலக்கு