கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த இரு மாதங்களாக விளையாட்டு துறை சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியிருந்தன. ஐபிஎல் உள்ளிட்ட முன்னணி விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு மெல்லமெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணி வீர, வீராங்கனைகள் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் அவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர் எனவும், இரண்டு மாதம் கழித்து பயிற்சியைத் தொடங்கும் அவர்களுக்குப் புதிய சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்பட சிறப்புக் கவனம் அளிக்கப்படுகிறது என ஹாக்கி இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.