தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி என்று சொன்னதும் அனைவருக்கும் நம் நினைவில் நிற்பது நாவில் தேன் மதுர சுவை ஊற செய்யும் கடலை மிட்டாய் தான். ஆனால் கோவில்பட்டிக்கு ஹாக்கி பட்டி என்று மற்றொரு பெயரும் உண்டு. நூறு ஆண்டுகளை கடந்து காலம் காலமாக ஹாக்கியை விருப்ப விளையாட்டாக கோவில்பட்டி, பாண்டவர்மங்கலம், திட்டங்குளம், வடக்கு திட்டங்குளம், ஏனைய பிற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.
கடந்த 1990ஆம் ஆண்டுகளிலேயே அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டியில் நடந்துள்ளன. அதன் பிறகு தேசிய அளவிலான வீரர்கள் வருகை குறைவு, போட்டி நடத்துவதற்கான செலவு, போதிய வசதியின்மை உள்ளிட்ட காரணத்தால் ஹாக்கி போட்டி நடத்துவது கைவிடப்பட்டது. ஆனால் இளைஞர்களிடையே ஹாக்கி ஆர்வம் மட்டும் குறையாமல் காலாகாலத்திற்கும் கடத்தி வரப்பட்டது.
கோவில்பட்டி, அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஹாக்கி விளையாட்டை பிரதான பொழுது போக்காக விளையாடும் பொருட்டு, ஊருக்கு வெளிப்புறமாக உள்ள கண்மாய்கள், குளம், குட்டை வறண்ட நிலம் உள்ளிட்டவைகளை சமன்படுத்தி ஹாக்கி மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். புழுதிக் காட்டில் மண் தரையில் அனல் பறக்கும் ஹாக்கி விளையாட்டை தற்போதும் கோவில்பட்டியில் நாம் பார்க்க முடியும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கோவில்பட்டியில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு செய்து அனுப்பபட்டிருப்பதும், அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடத்தியதும் கோவில்பட்டி இளைஞர்களுக்கு ஹாக்கி மீதான ஆர்வத்தை விளக்குவதற்கான சான்றுகளில் ஒன்று. களிமண் தரையில் சூடு பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, தூள் கிளப்பிய கோவில்பட்டி ஹாக்கி வீரர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் போது அதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடிவதில்லை.
ஏனெனில் களிமண் தரையில் ஹாக்கி பழகி பயிற்சி எடுத்துக்கொண்ட வீரர்களுக்கு சர்வதேச அளவிலான போட்டியில் செயற்கை புல் வெளி மைதானத்தில் விளையாட நேரிடும் பொழுது மைதானத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் வேகத்துடன் செயல்படுவதில் சுணக்கம் இருந்து வந்தது. இதை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவில்பட்டியில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி மைதானம் அமைக்க வேண்டும் எனவும், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் பயனாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால், கோவில்பட்டியில் சர்வதேச அளவில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து 7 கோடி ரூபாய் செலவில் உயர் தரத்துடன் சர்வதேச அளவில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டது.
ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்த இது, அவர்களின் சர்வதேச கனவுக்கும் அடித்தளமிட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாட்டில் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் 30 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவச கல்வியுடன் கூடிய விளையாட்டு பயிற்சியினை அரசு வழங்கி வந்தது.
அதன் பயனாக இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஹாக்கி விளையாட்டு வீரர்கள் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிக்கு பெங்களூருக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன், அரியலூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதான விளையாட்டு விடுதியில் தங்கியிருந்து ஒன்றாக பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் ஆவர்.
பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த இவர்களது ஆட்டம், தேசிய அளவில் அசாமில் நடந்த போட்டியிலும் தடம் பதித்தது. இதையடுத்து இன்று மாரீஸ்வரனும், கார்த்திக்கும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.